மயிலாடுதுறை :மூவலூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் ராஜ்குமார்(20). கட்டுமானப் பணியில் சித்தாளாக வேலைப் பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று பணிக்குச் சென்ற அவர் வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இன்று (அக்.31) காலை மயிலாடுதுறை அருகே மஞ்சளாறு ரயில்வே தண்டவாளத்தில் இடது கண், பின் தலையில் பாட்டில் மற்றும் கருங்கல்லால் குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதற்காக காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சித்தர்காடு தெற்கு வீதியைச் சேர்ந்த குருமூர்த்தி மகன் கபிலன்(22), குத்தாலம் மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஆகியோர் ராஜ்குமாரை அடித்துக்கொன்றது தெரியவந்தது.