மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி மீனவக் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் ஆறுமுகம்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆறுமுகம் ஊர் பஞ்சாயத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதயகுமார் தரப்பை சேர்ந்தவர்கள் ஆறுமுகம், அவரது உறவினர் ஆனந்தமுருகன் குடும்பத்தினரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து பொறையார் காவல் நிலையத்தில் ஆனந்தமுருகன் அளித்த புகாரின் பேரில் சின்னங்குடியைச் சேர்ந்த கலைமணி, ராஜாமணி, ராஜீவ்காந்தி, உதயகுமார் ஆகியோர் மீது காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பிரச்னை தொடர்பாக கூட்டத்தில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று சின்னங்குடி ஊர் பஞ்சாயத்தார்கள் அவர்களிடம் சமாதானம் பேசி உள்ளனர்.
இரண்டு குடும்பங்கள் போராட்டம் இதற்கு ஆறுமுகம் உடன்படாததால் தங்கள் இரு குடும்பத்தினரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டு தொழிலுக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.
தங்களுடன் யாராவது பேசினால் பேசுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். உள்ளூர் கடைகளில் மளிகை பொருள்கள், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அத்தியாவசிய பொருள்களையும் கொடுக்கக்கூடாது என ஒலிபெருக்கியில் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நேரிலும், இணையதளம் வழியாகவும் வருவாய் துறையினர், காவல்துறையினருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று(அக்.23) கண்களில் கறுப்பு துணியை கட்டி மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலக வாயிலில் ஆறுமுகம், ஆனந்தகுமார் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: “ஜம்மு காஷ்மீரின் கொடியை உயர்த்த அனுமதிக்கும் வரை, வேறு எந்த கொடியையும் பிடிக்க மாட்டோம்”- மெகபூபா முஃப்தி!