நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் தொடர்ந்து நள்ளிரவில் மணல் கொள்ளை நடப்பதாகப் பொதுமக்களிடமிருந்து, காவல்துறையினருக்குத் தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர்.
அதன்படி, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி கரியாப்பட்டினம் அருகே நள்ளிரவில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது மணல் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடினர். இந்தச் சம்பவத்தில் தனிப்படை காவல்துறையினர் ஒருவர் படுகாயமடைந்தார்.
பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடி வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம், கவுண்டர்மேடுவைச் சேர்ந்த சக்திவேல், கத்திரிபுலம் கோவில்குத்தகையைச் சேர்ந்த கோபிநாதன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நாகை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரை ஏற்று இருவரையும் குண்டாசில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நேற்று(மே.13) இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:'இன்று முதல் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை' அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!