திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த மேல் பள்ளிப்பட்டு பகுதியிலுள்ள பெருமாள் கோயிலில் அடையாளம் தெரியாதவர்கள் 2 பேர் நள்ளிரவு கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்து கொண்டிருந்த போது சத்தம் கேட்டு ஊர் பொதுமக்கள் அங்கு சென்றுள்ளனர்.
பொதுமக்கள் வருவதை கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (21) என்பவரை ஊர் பொதுமக்கள் துரத்தி பிடித்த பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். மற்றொருவர் திருடிய உண்டியலுடன் தப்பியோடினார்.
இந்தத் தகவலின் பேரில் விரைந்து சென்ற கிராமிய காவல் துறையினர், ஊர் மக்கள் பிடித்து வைத்திருந்த பிரசாந்த் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் உண்டியலுடன் தப்பியோடிய மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலு (23) என்பவரை கைது செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் சேர்ந்து கோயில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதித்துறை நடுவர் காளிமுத்து வேல் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பகையாளி வீட்டை மறந்து, பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு