மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (நவ.2) இரவு முதல் இன்று காலை வரை 12 மணி நேரத்தில் சுமார் 22 சென்டிமீட்டர் மழைப்பதிவானது. இந்த திடீர் கனமழையால் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் சுற்றுவட்டாரப்பகுதி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் எனப்பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் குறவலூர் அருகே பிரதான வடிகால் ஆறான மணிக்கரணை ஆற்றில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் முழுவதுமாக விளைநிலங்களுக்குள் புகுந்து சம்பா பயிர்கள் முற்றிலும் மூழ்கின. இதேபோல், சீர்காழியைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் வடிகால் ஆறு மற்றும் வாய்க்கால்கள் மூலம் கரைகளில் உடைப்பு ஏற்பட்டும்; நீர் வெளியே வடிந்தும் விளைநிலங்களுக்குள் மழைநீர் முழுவதுமாக உட்புகுந்தன.
இதன் காரணமாக திருவாலி, மணல்மேடு, நிம்மேலி, புதுத்துறை, குறவலூர், நெப்பத்தூர், திருநகரி, மங்கைமடம் சுற்றுவட்டாரப்பகுதி கிராமங்களில் 20ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் முற்றிலும் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். முறையாக, வடிகால் ஆறு மற்றும் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாததே விவசாயம் பாதிக்கப்பட்டதற்குக்காரணம் என இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின - உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் தூர்வாராமல், 100 நாள் வேலைத்திட்டத்தில் பெயரளவில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரப்படுவதாகவும்; இதன் காரணமாக வாய்க்கால்கள் ஆழம் குறைந்து புதர்கள் மண்டி இருப்பதால் மழைநீர் வடியாமல் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, உடனடியாக அனைத்து வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும்; பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விளைபொருட்களை தலையில் சுமக்கும் நிலைக்கு தீர்வு - சென்னை ஐஐடி புதிய கண்டுபிடிப்பு