தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்யக் கோரி 21 மீனவ கிராம மக்கள் வேலை நிறுத்தம்..

அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்யக் கோரி 21 மீனவ கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்
சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்யக் கோரி 21 மீனவ கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்

By

Published : Aug 1, 2023, 2:50 PM IST

சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்யக் கோரி 21 மீனவ கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்

மயிலாடுதுறை: சுருக்குமடி மற்றும் அதிவேக இரட்டை இஞ்ஜின்களுக்கு தமிழகத்தில் தடை உள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு சென்ற போது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. சுருக்குமடிவலைகளுக்கு ஆதரவாக பூம்புகார் மற்றும் சில மீனவ கிராமங்களும், எதிர்ப்பாக தரங்கம்பாடி மற்றும் 21 மீனவ கிராமங்களும் மயிலாடுதுறை மாவட்டத்தில் களத்தில் உள்ளன.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்ட படகுகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் இல்லாத நிலையில், பூம்புகாரைச் சேர்ந்த 11 சுருக்குமடிவலை மீனவர்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று தங்கள் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 31) சில படகுகள் மயிலாடுதுறை மாவட்ட கடல் எல்லைக்குள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாகவும், அதனை சந்திரபாடி மீனவர்கள் கடலில் வாங்கி பைபர் படகில் கரைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்து மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து தரங்கம்பாடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் அறிந்து வந்த கடலோர காவல் படை மற்றும் பொறையார் போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரப்பாடி மீனவர்களை பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பைபர் படகில் இருந்த மீன்கள் தரங்கம்பாடி துறைமுகத்தில் ஏலமிடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொறையார் காவல் நிலையத்திற்கு வந்த சந்திரப்பாடி மீனவர்கள், தரங்கம்பாடி மீனவர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்‌பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நள்ளிரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 300 மேற்பட்ட விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலை சம்பந்தமாக இன்று (ஆகஸ்ட் 1) மாலை மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடியில் 21 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்சம்பவத்தால் மீனவ கிராமங்கள் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க:"இன்சூரன்ஸ் முதிர்ச்சி.. உடனே பணம் செலுத்துங்கள்" என பல லட்சம் மோசடி: பலே கில்லாடி சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details