மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழனை ஆதரித்து மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக கட்சியே இல்லை. அது டெண்டர் நிறுவனம். மோடியின் தமிழ்நாட்டு கம்பெனிதான் எடப்பாடி அதிமுக. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி கேட்டும் உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாதவர் மோடி. முதலாளியாக இருக்கும் மோடி பணியாளராக உள்ள எடப்பாடியிடம் நிதியை எப்படி கொடுப்பார். பாஜக அதிமுகவை எதிர்க்கவில்லை; நம்மைதான் அதிகம் எதிர்க்கிறார்கள்.
சிறுபான்மையினர், கிறிஸ்தவ மக்களை ஏமாற்றி ஓட்டுப்பெறுவதற்காகதான் திமுக- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனாலும் பாஜகவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுக கூட்டணி அமைத்துள்ளார். இந்துக்கள் வாக்கு விழாமல் போய்விடுமோ என்ற பயத்தில்தான் நான் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். அரசியல்வாதிகள்தான் மதம் பிடித்து அலைகிறார்கள் யாரும் எந்த மதத்தையும் விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது அவரவர்கள் பிடித்த மதத்தில் இருக்கிறார்கள். ஒற்றுமையுடன்தான் இருக்கிறார்கள். அரசியல் மதம் பிடித்தவர்கள்தான் பிரித்தாளும் சூழ்ச்சியால் கலவரத்தை ஏற்படுத்துகின்றனர்" என்றார்.