மயிலாடுதுறை: திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் சனிக்கிழமை (ஆக.28) மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ரயில்வே ஊழியர்கள் தங்கும் அறை, நடைபாதை, குடிநீர் வசதி குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
அவரிடம் மயிலாடுதுறை, சீர்காழி வர்த்தக சங்கங்கள், ரயில்வே பயணிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதேபோல, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், எஸ்.ஆர்.எம்.யூ.தொழிற்சங்க திருச்சி கோட்ட தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மணிஷ் அகர்வால், "காரைக்கால் - பேரளம் மார்க்கத்தில் அகல ரயில் பாதை பணிகள் விரைவில் முடிக்கப்படும். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அதில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதை பணிகள் நடைபெறுவதில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி கோட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக 22 ரயில்கள் நிறுத்தப்பட்டன. அவை படிப்படியாக இயக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்குப் பணிகள் தொடக்க விழா: ஆதீனங்கள் பங்கேற்பு