மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகள் சுமார் 40 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் தீமிதி உற்சவம், பால்குடம் உள்ளிட்ட கிராமியத் திருவிழாக்களில் பச்சைகாளி, பவளக்காளி போன்ற வேடங்கள் அணிந்தும், ஒரு சிலர் ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக நிறுவனங்களில் யாசகங்கள் பெற்றும் தங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
இவர்களுக்குச் சுயதொழில் தொடங்க 100 சதவீத மானியத்தில் ரூ.50,000 கடன் வழங்க சமூக நலத்துறை முன்வந்தாலும், சாமானியர்களைப் போன்று தொழில்களை நடத்துவதில் இவர்களுக்குப் பல சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இவர்களில் பெரும்பாலோனோர் மாடு வளர்த்து தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொள்வதாகக் கூறி மாடு வளர்ப்பதற்குக் கடன் கேட்கின்றனர்.
ஆனால், வாடகை வீடுகளில் தங்கியுள்ள இவர்களை மாடு வளர்க்க வீட்டின் உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. இதனால் தங்களுக்கு வீடுகட்டிக்கொள்ள ஏதுவாக குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் எனத் திருநங்கைகள் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அறுவடை செய்த நெல்மணிகளை விற்கமுடியாமல் விவசாயிகள் தவிப்பு.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
இந்நிலையில், திருநங்கைகளுக்கு மாதந்தோறும் குறைதீர்க் கூட்டம் நடத்த வேண்டும் எனத் தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் திருநங்கைகள் குறைதீர்க்கூட்டம் மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரேகா தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால்,மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தாதேவி மற்றும் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் 20 பேர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், சங்கத் தலைவி சினேகா தலைமையில் கலந்துகொண்ட திருநங்கைகள் அனைவரும் தாங்கள் மாடு வளர்ப்பதற்கு ஏதுவாக சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்களிடம் பேசிய கோட்டாட்சியர் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் அனைவருக்கும் ஒரே இடத்தில் பட்டா வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் திருநங்கைகள் மாடு வளர்ப்பு மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:அழகான கடிதம் எழுதுவது எப்படி? - உலக கடிதம் எழுதும் நாள் சிறப்பு தொகுப்பு!