வனத்துறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியால் 2 மணி நேரமாக மயிலாடுதுறையில் போக்குவரத்து பாதிப்பு மயிலாடுதுறை:வனத்துறை அமைச்சர் பங்கேற்ற தனியார் ஸ்கேன் சென்டர் திறப்பு விழாவினால், அப்பகுதியில் இரண்டு மணி நேரமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ஒருவழிப் பாதையில் அனைத்து வாகனங்களையும் போலீசார் திருப்பிவிட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மயிலாடுதுறை காந்திஜி சாலையில் தனியார் ஸ்கேன் சென்டர் திறப்பு விழா இன்று (மே.1) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரம ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் உடன் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான நிவேதா முருகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், ஒன்றிய, நகர திமுக பொறுப்பாளர்கள் என்று ஒரு பெரும் படையே தனித்தனி வாகனங்களில் வந்திருந்தது.
மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் நகருக்குள்ளேயே முக்கிய இடத்தில் ஸ்கேன் சென்டர் அமைந்திருந்ததால் அமைச்சருடன் வந்திருந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்படி நிறுத்தப்பட்டு இருந்தன. இவ்வாறு, சுமார் 2 மணி நேரம் நிகழ்ச்சி நடைபெற்ற காரணத்தால், அந்த வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நகரின் முக்கியமான மையப்பகுதி என்பதால் சாலையின் நடுவே தடுப்புக் கட்டைகள் அமைத்து செல்வதற்கு ஒரு வழியும் போவதற்கு ஒரு வழியும் என்று இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு இருக்கும். போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு சாலையில் அப்படியே போக்குவரத்தை நிறுத்திவிட்டு, ஒரு வழிப் பாதையில் வாகனங்களை போக்குவரத்து காவலர்கள் திருப்பி அனுப்பினர். இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். நிகழ்ச்சி முடிவடைந்து அமைச்சர் கிளம்பிய பின்பு போக்குவரத்து காவலர்கள் நிம்மதியாக பெரு மூச்சுவிட்டனர்.
இதையும் படிங்க:"மெட்டு சரியில்லை எனில் அண்ணாமலையே பாடியிருக்கலாமே' - சீமான் கிண்டல்