மயிலாடுதுறை திருவிக காய்கறி மார்க்கெட் கட்டடங்கள் பழுதடைந்துள்ளதாகவும், அதனால் உயிர் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், மேலும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் காவிரி தென்கரையில் மகாதானத் தெரு தொடங்கும் பகுதியில் திருவிக மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் இயங்கி வருவதால், இந்த பகுதியில் மார்க்கெட் பகுதி என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம், கடந்த 1997ஆம் ஆண்டு நகராட்சி சார்பில் 66 கடைகள் கட்டி கொடுக்கப்பட்டு, கடைகள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை பொது ஏலம் விடப்படும். ஏலத்தொகையை செலுத்தி காய்கறி வியாபாரிகள் கடையை எடுத்து நடத்தி வருகின்றனர்.
இந்த காய்கறி மார்க்கெட்டிற்க்கு மயிலாடுதுறை நகரவாசிகள் மட்டுமின்றி மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். மேலும், உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் திருமணங்கள், சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இங்கு வந்து பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது.
இதையும் படிங்க:வேலைக்கு வந்த இடத்தில் மனநல பாதிப்பு - வடமாநில தொழிலாளர் ரயிலில் மரணம்
மார்க்கெட் கான்கிரீட் கட்டடமாக கட்டி கொடுக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், கான்கிரீட் சிமெண்ட் காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுந்தும், மழைக்காலங்களில் மழைநீர் கசிவும் ஏற்படுகிறது. காய்கறி வியாபாரிகள் ஒரு சிலர் தங்கள் கடையின் மேற்கூரையின் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து விழுவதால் பழுதுநீக்கம் செய்து வைத்துள்ளனர். இதில் பெரும்பாலான வியாபாரிகள் தங்கள் கடைகளில் கான்கிரீட் காரைகள் பெயர்ந்து விழுந்தும், கம்பிகள் தெரிவதாலும், துருப்பிடித்து கம்பிகள் விழுவதாலும் தகர சீட் கொட்டகை அமைத்து கடை நடத்தி வருகின்றனர்.
வாழைப்பழக்கடை ஒன்றில் கான்கிரீட் பீம் சிதலமடைந்துள்ளதால் அதில் மரப்பலகை அடித்து மூங்கில் மரங்களை வைத்து முட்டுக் கொடுத்துள்ளனர். கட்டடங்கள் புதர் மண்டியும் உள்ளது. இருப்பினும், சிமெண்ட் காரைகள் தொடர்ந்து பெயர்ந்து விழத் தொடங்கியதால், மழையும் அவ்வப்போது பெய்வதால் மக்களும், வியாபாரிகளும் உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் காய்கறிகளை சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், திருவிக மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் காரைகள் அதிக அளவில் பெயர்ந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த கடையில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், ஒரு சில வியாபாரிகள் கடைகளை பூட்டிவிட்டு தள்ளுவண்டிகளிலும், டாடா ஏஸ் வாகனத்திலும் காய்கறிகளை வியாபாரம் செய்கின்றனர்.
நகர மக்களின் அச்சத்தை போக்கி, மக்கள் காய்கறிகளை வாங்க சந்தைக்கு பயமின்றி வர கட்டடத்தை சீர்செய்ய நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கள்ள நோட்டுகளை அச்சடித்த கும்பல் - காய்கறி சந்தையில் இருந்து சிக்கியது எப்படி?