மயிலாடுதுறை திருமஞ்சன வீதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 2001ஆம் ஆண்டு நடைபாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் குறுகிய காலத்தில் சேதம் அடைந்து, பாலத்தின் மையப்பகுதியின் ஒருபக்கம் 7 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்துள்ளது.
தற்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதாலும், மின் விளக்குகள் இல்லாததாலும் இரவு நேரத்தில் நடைபாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப்பாலத்தில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடனேயே அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
சேதம் அடைந்த பாலத்தை அகற்றி, புதிய பாலம் அமைத்துத்தர வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினர், பொதுப்பணித்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆறு முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், இன்று(அக்.03) மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில், விபத்துகள் ஏற்படும் முன்பே அரசு பழைய பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைத்துத் தர வலியுறுத்தினர். பின், நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, கண்ணில் கறுப்புத்துணி கட்டி, காவிரி ஆற்றில் இறங்கி, அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி ஆற்றுபாலத்தை புதுப்பித்து தரக்கோரி, கண்ணில் கறுப்புக்கொடி கட்டி நூதனப்போராட்டம்! அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: 'புதிய அணைகள் 60 ஆண்டுகளில் கட்டப்படாததால் இருக்கின்ற அணைகளை நாம் காக்க வேண்டும்'