மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில், அவரது உருவப்படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவிக்க முயன்றபோது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அம்பேத்கரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் பட்டவர்த்தி கிராமத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பட்டவர்த்தி கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை பிரச்சனைகளின்றி நடத்துவது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பட்டவர்த்தி கிராமத்தில் அரசு தரப்பில் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவது என்றும், இதில் கிராம மக்கள் இரு தரப்பினரும் தலா 20 பேர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.