மயிலாடுதுறை: கொள்ளிடம் முதல் பொறையார் வரை தேசிய நெடுஞ்சாலை எண் 45ஏ நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காகக் கொள்ளிடத்திலிருந்து பொறையார் வரை உள்ள நிலம், வீடு, கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும், மேல் முறையீட்டிற்கான விசாரணை நடத்தாமலும், குடியிருப்புகளை இடித்து சாலைப் பணிகளைச் செய்துவருவதாக நெடுஞ்சாலைத் துறை மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூர் ஊராட்சிக்குள்பட்ட வெள்ளக்குளம், காலக்கட்டளை பகுதியில் மரம், வீடு, நிலங்களைக் கனரக இயந்திரம் மூலம் முன்னறிவிப்புகள் ஏதுவுமின்றி கையகப்படுத்த முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.