நாகை மாவட்டம் நாகலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த நடுநிலை பள்ளிக்கு கிராம மக்கள் சார்பாக கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீராக வழங்கிய கிராம மக்கள்! - nagapattinam
நாகை : நாகலூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கல்விச்சீராக கிராம மக்கள் சார்பாக வழங்கப்பட்டது.
கிராம மக்கள் சார்பாக பள்ளிக்குத் தேவையான புரஜெக்டர், ஸ்மார்ட் டிஸ்ப்ளே, கம்ப்யூட்டர், சில்வர் தட்டு, நாற்காலி, கடிகாரம், மின் மோட்டார் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மேளதாளம் முழங்க கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளையும் தொடங்கி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து பேசிய பெற்றோர்கள், 'தனியார் பள்ளி மோகத்தை தவிர்த்து அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும். அதுபோல், தனியார் பள்ளி மாணவர்களோடு அரசு பள்ளி மாணவர்கள் போட்டிபோடும் அளவு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை வழங்கினோம்’ எனத்தெரிவித்தனர். இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.