தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 23, 2019, 2:40 PM IST

ETV Bharat / state

மாற்று சமுதாயத்தினரை அவதூறாகப் பேசிய இளைஞர்கள் கைது

நாகை: பொன்னமராவதி போல் பொறையாறில் சமூக வலைதளங்களில் மாற்று சமுதாயத்தினர் குறித்து அவதூறு பரப்பிய ஒன்பது இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Nagai

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாற்று சமுதாயத்தை தவறாகப் பேசி வாட்ஸ் ஆப்பில் பரவிய செய்தி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியது. இந்த பிரச்னை அடங்குவதற்குள் நாகையிலும் இதேபோல் மாற்று சமுதாயத்தை தவறாக பேசி சமூக வலைதளத்தில் செய்தி பதிவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, நாகை மாவட்டம் பொறையார் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பெயரில் மாற்று சமுதாயத்தை இழிவாக பேசி வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில் தகவல் பரப்பிய ஒன்பது இளைஞர்களை இன்று சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து மாங்குடி, பூதங்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரேம்குமார், கௌதமன், மதிவாணன், ஜான்சன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது 143, 153 (A) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் மாற்று சமுதாயத்தைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ள நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details