டிகேஎஸ் இளங்கோவன் மேடைப்பேச்சு மயிலாடுதுறை: மயிலாடுதுறை திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில், திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நல்லத்துக்குடியில் நேற்று (மே 9) நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் முருகுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் சிறப்புரையாற்றிய டிகேஎஸ் இளங்கோவன், “நாட்டினுடைய சொத்தை எல்லாம் பணக்காரர்கள் சுருட்டி கருப்பு பணமாக வைத்துள்ளனர். அந்த சொத்தை எல்லாம் அவர்களிடம் இருந்து மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் ரூபாய் பணம் தருவதாக குஜராத் மாடல் ஆட்சி நடத்தும் மத்திய அரசு கூறியது.
வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறினார்கள். 20 பணக்காரர்கள் வங்கியில் வாங்கிய இரண்டு லட்சம் கோடி ரூபாய் பணத்தைக் கட்டாமல் உள்ளனர். அந்த 20 பணக்காரர்களின் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.
கல்விக் கடன், விவசாயிகள் பெற்ற கடனை வங்கிகள் திருப்பிச் செலுத்தக் கூறுகிறது. ஆனால், பணக்காரர்களிடம் இருந்து கருப்பு பணத்தை பிடுங்கி மக்களுக்கு கொடுப்பதாகக் கூறிவிட்டு, மக்களிடம் இருந்து பணத்தைப் பெற்று பணக்காரர்களுக்கு கொடுப்பதுதான் மோடியின் குஜராத் மாடல் ஆட்சியாக உள்ளது.
பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியாக உள்ளது. பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் குஜராத் மாடல் ஆட்சியைப் பற்றி சொல்லிதான் ராகுல் காந்தி மாட்டிக் கொண்டார். இரண்டு மோடி இருக்கிறாங்க, ஒருவர் லலித் மோடி, இன்னொருவர் சுஷில் மோடி.
இந்த இருவரும் வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றி வெளிநாட்டுக்கு ஓடி உள்ளனர் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்வதற்காக, ‘இந்த மோடிங்க எல்லாம் நாட்டை ஏமாற்றிக் கொண்டு உள்ளனர்’ என்று பொதுப்படையாக சொல்லிவிட்டார். உடனடியாக, சாதியை இழிவுபடுத்திவிட்டதாக ராகுல் காந்தி மீது குஜராத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் காலம் சிறைத் தண்டனை விதித்து, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வழங்கிய குஜராத் நீதிபதி மோடிக்கு விசுவாசமாக இருந்ததால், அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு திட்டத்தைக் கூட மோடி அரசு நிறைவேற்றவில்லை.
பணக்காரர்களுக்காக அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் அதானி, அம்பானிக்கு விற்பனை செய்து ஏழை, எளிய மக்களைப் பற்றி கவலைப்படாமல், பணக்காரர்களுக்கு புரோக்கர் வேலை செய்யும் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். யார் உற்பத்தியாளரோ, அவரே விலையை நிர்ணயிக்கிறார்.
ஆனால், விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளுக்கு வாங்குபவர் விலையை நிர்ணயிக்கின்றனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் விவசாயிகள் 20 சதவீதம் உற்பத்தி செய்கின்றனர். உற்பத்தி செய்த பொருளுக்கு விலையை நிர்ணயிக்க, பொருளை வாங்குபவர்களிடம் கெஞ்சி கொண்டிருக்கிற நிலை உள்ளது. இதனை மாற்றுவதற்கு திட்டம் தீட்ட வேண்டும். அதற்காகத்தான் கருணாநிதியால் திட்டமிடப்பட்டு விவசாயிகளின் நலன் காக்க ‘உழவர் சந்தை’ கொண்டு வரப்பட்டது” எனக் கூறினார்.
இதையும் படிங்க:சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சருக்கு நேர்ந்த சோதனை; காலி சேர்களை பார்த்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி