உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்தது போல் காணப்பட்டாலும் கொரோனாவின் கொடூர முகம் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியால் உறைந்துள்ளனர். இதனைத் தடுக்க மருத்துவத் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் 30 பேருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, இந்திய மக்கள் பீதியடைந்துள்ளனர். மருத்துவத்துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வோடு இருக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அறிகுறிகள் இருப்பவர்களை கண்காணிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் ஆண்களுக்கு இரண்டு படுக்கைகளும், பெண்களுக்கு இரண்டு படுக்கைகளும் தனித்தனி அறைகளில் போடப்பட்டுள்ளன.