மயிலாடுதுறை: அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மூன்றாவது நாளாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது.
கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என நேற்று (ஜன.7) வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. இதையடுத்து, இரவு தொடர்ந்து பரவலாக கனமழை பெய்ததில் இன்று (ஜன.8) காலை நிலவரப்படி மயிலாடுதுறை 105.4 மி.மீ, மணல்மேடு 111 மி.மீ, சீர்காழி 235.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
மேலும், கொள்ளிடம் 194.4 மி.மீ, தரங்கம்பாடி 92.4 மி.மீ, செம்பனார்கோவில் 52.2 மி.மீ என மாவட்டத்தில் சராசரியாக 131.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இன்று (ஜன.8) மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் அறுவடை பணிகள் துவங்கிய நிலையில், தாழ்வான பகுதிகளில் விவசாய நிலங்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.
ஆனந்ததாண்டவபுரம், கீழ மருதாந்தநல்லூர், மேல மருதாந்தநல்லூர், மாப்படுகை, பாண்டூர், பொன்னூர், அருண்மொழித்தேவன், தரங்கம்பாடி தாலுகா, நரசிங்கநத்தம், கடக்கம், சேத்தூர், பெரம்பூர், கழனிவாசல், அரசூர், வில்லியநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சம்பா தாளடி பயிர்கள் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில், வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
இந்த மழை தொடர்ந்து நீடித்தால், மூழ்கியுள்ள பயிர்கள் முளைத்து விடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை நீடித்து வருகிறது. மழை நின்று தண்ணீர் வடிந்தாலும், அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது மகசூல் இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர். மேலும், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நாகையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி: 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு