மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் தொன்மைவாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தீபாவளி அருளாசி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “உள்ளத்தில் புத்துணர்வை பெருகச் செய்து வாழ்வில் நம்பிக்கை ஒளியை தூண்டுவதே நம் பண்டிகைகள் ஆகும். அம்முறையில் தீபாவளி மிகவும் குறிப்பிடத்தக்கது. புத்தாடை, வாணவேடிக்கை, சுவையான தின்பண்டங்கள் என தீபாவளியை வளப்படுத்தும் அம்சங்கள் பல உள்ளன.
இருப்பினும் அதிகாலையில் நீராடுதல் தீபாவளியின் மிகச் சிறப்பான அம்சமாகும். இந்த நீராடல் கங்கை நதியில் நீராடுதலுக்கு சமம். ஆகையால் இது கங்கா ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. கடவுளை, குருவை பெற்றோரை வழிபட்டு பண்டிகையை கொண்டாட வேண்டும். மனம் மகிழ்ச்சியாக உள்ள தருணம் சிறப்பான எதிர்கால திட்டங்களை உருவாக்க ஏற்ற தருணமாகும்.