மயிலாடுதுறை: கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்ததில், தரங்கம்பாடி தாலுகாவில் 24 மணி நேரத்தில் நேற்று காலை (நவம்பர் 29) 6 மணிவரை 68 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்கியது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி உடனாகிய அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் மழை வெள்ளம் நேற்று உட்புகுந்தது.
இந்நிலையில் கோயில் குளம் நிரம்பியதால் கோயிலிலிருந்து குளத்திற்குச் செல்லும் வடிகால் வழியாக வெள்ளம் சுவாமி சன்னதியில் புகுந்து முழங்கால் அளவிற்குத் தேங்கியது. மேலும் வெள்ளம் கொடிமரம் உள்ள வெளிப்புறத்திலும் சூழ்ந்தது.
கோயிலில் நாள்தோறும் ஆயுள் விருத்தி வேண்டியும் 60 வயதில் சஷ்டியப்தபூர்த்தி விழா, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் நடைபெற்றுவரும் நிலையில் திருமணத்திற்கு வந்த பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். திருமணம் செய்துகொண்ட தம்பதியர் சாமியை தரிசனம் செய்வதற்குச் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.