தமிழ்நாட்டில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு காவல் துறை அபராதம் விதித்துவருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க, இனி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பெட்ரோல் வழங்கப்படாது என்ற அறிவிப்பு பதாகைகளை வைக்குமாறு மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை உத்தரவின் பேரில் மயிலாடுதுறையில் நகரில் உள்ள அனைத்து பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டன.
தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் இல்லை! - Mayiladudurai
நாகை: மயிலாடுதுறையில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு வெளியான நிலையில், அதனை சரிவர நடைமுறைப்படுத்த முடியவில்லை என பெட்ரோல் சேமிப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதியான இன்று அனைத்து பெட்ரோல் சேமிப்பு நிலையங்களிலும் வழக்கம் போல் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என்று கூறினால் தகராறு ஏற்படுவதாகவும், காவல் துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே பேனர் வைத்ததாகவும், இதை நடைமுறைப்படுத்தக் காவல் துறையினர் பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் பாதுகாப்பு வழங்கி ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று பெட்ரோல் சேமிப்பு நிலைய ஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்த அறிவிப்பு குறித்து துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரையிடம் கேட்டபோது, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மயிலாடுதுறை நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து இந்த அறிவிப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.