நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் புகழ் பெற்றதாகும். கங்கை முதலான புண்ணிய நதிகள், துலா மாதமான ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி பாவத்தை போக்கிக் கொண்டதாக ஐதீகம். ஆதலால், மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் அனைத்து புண்ணிய நதிகளும் சங்கமம் ஆகும் என்பதால், துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி மிகவும் பிரசித்திப் பெற்றது. மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் நவம்பர் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துலா உற்வசம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் 10ஆம் நாளான இன்று (நவம்பர் 15) முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறையில் துலா உற்சவம் : துலாகட்ட காவிரியில் நீராடிய பக்தர்கள் - Temple Festival
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் துலா உற்சவத்தின் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று துலாகட்ட காவிரியில் புனித நீராடினர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கோயில் திருவிழாக்களுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளதால், சுவாமிகள் புறப்பாடு வீதி உலா செல்லாமல் ஆலயங்களின் பிரகாரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து சிவாலயங்களான மாயூரநாதர், ஐயாரப்பர், வதான்யேஸ்வரர், காசிவிசுவநாதர், படித்துறை விசுவநாதர் உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து அஸ்திரதேவர் மட்டும் காவிரிக்கரையின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளச் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. துலாகட்ட காவிரியின் இரண்டு கரைகளிலும் ஒரே நேரத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுப் புனித நீராடினர்.
இதையும் படிங்க: சிக்கல் சிங்காரவேலர் ஆலய கந்த சஷ்டி விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது - ஆட்சியர் தகவல்!