மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசின் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் குறைந்த விலையில் வழங்கப்படும் உணவால் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமானோர் பயனடைந்தனர். நாள் ஒன்றுக்கு ரூ. 250 சம்பளத்தில் 12 தொழிலாளர்கள் இந்த உணவகத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த உணவகம் நாளொன்றுக்கு 3,600 ரூபாயை நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
எனவே இந்த உணவகத்தில் காலை, மதியம் உணவு விற்பனை ஆவதை கொண்டு நகராட்சி நிர்ணயித்த 3600 ரூபாயை தினம்தோறும் செலுத்தி வந்தனர். இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வரத்து குறைந்துள்ளதால் விற்பனையும் சரிந்துள்ளது. கடந்த மாதங்களில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்கியதால், பற்றாக்குறை இல்லாமல் செயல்பட்டுவந்த அம்மா உணவகம், கடந்த 1ஆம் தேதி முதல் விற்பனை குறைவு காரணமாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியவில்லை.