மயிலாடுதுறை: மல்லியம் கிராமத்தில் இந்திரா நகர், நாகராஜ்நகர், கீழத்தெரு, குச்சிபாளையம் வீரமேட்டுத்தெரு, மஞ்சவாய்க்கால் தெரு உள்ளிட்டப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்டோர் அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. கான்கிரீட் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து வருவதால் தொகுப்பு வீடுகளில் வசிக்கும்போது மக்கள் கடும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு கீழத்தெருவில் தொகுப்பு வீட்டில் வசிக்கும் விவசாயக்கூலித்தொழிலாளி செந்தில், அவரது மனைவி வேம்பு, மூன்று மகன்கள், ஒரு மகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவு தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
இதில் வேம்புவுக்கு கால், தலை முகத்தில் அடிபட்டு படுகாயமடைந்தார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காலில் 10 தையல்கள் போடப்பட்டுள்ளன. அவரது 2 வயது மகள் கிரேஸி மீது காரைகள் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதேபோல் கடந்த வாரம் இந்திரா நகரில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த அனிதா தற்போது தான் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளார். தங்கள் பகுதியில் தொகுப்பு வீடுகள் இடியும் நிலையில் உள்ளதாகவும் மழைக்காலங்களில் வீட்டில் இருக்க முடியாமல் முன் பகுதியில் கொட்டகை போட்டு தங்குவதாகவும் வேதனை தெரிவித்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் புதிதாக வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் காயம் இதையும் படிங்க:மயிலாடுதுறையில் வீடு புகுந்து கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு - மூன்று பேர் கைது!