நாகை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (ஏப். 11) இரவு 8 மணி அளவில் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு வெறிநாய் பேருந்திற்காகக் காத்திருந்த பொதுமக்களைத் திடீரென கடிக்கத் தொடங்கியது.
பொதுமக்கள் சுதாரிப்பதற்குள் 10-க்கும் மேற்பட்டவர்களை கடித்துவிட்டு நீதிமன்ற வளாகம், நாகை அரசு தலைமை மருத்துவமனை என நிற்காமல் ஓடிய அந்த வெறி நாய் அது செல்லும் வழியெல்லாம் நின்றுகொண்டிருந்தவர்களைக் கடித்தது.
இதில் இரண்டு பெண்கள், ஒரு சிறுவன், முதியவர்கள் இரண்டு பேர், நீதிமன்ற ஊழியர் என 18 பேரை கடித்துக் குதறிய வெறி நாய் பேருந்து நிலையத்திலிருந்த கடைக்குள் நுழைந்தது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அந்த வெறிநாயை லாவகமாகப் பிடித்து அடித்துக் கொன்றனர். இந்த நிலையில் வெறி நாய் கடித்து 18 பேரும் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த நாகை அதிமுக வேட்பாளரும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவருமான தங்க கதிரவன் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பொதுமக்கள் அதிகம் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் வெறி நாய் 18 பேரை கடித்துக் குதறிய சம்பவம் நாகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
இதையும் படிங்க:ஜமீன் பல்லாவரத்தில் கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயற்சி!