மயிலாடுதுறை:பொதுவாக மனிதனுக்கும் நாய்களுக்குமான உறவு உன்னதமாக பார்க்கப்படுகிறது. நாய்களின் அளப்பரியா பாசத்தையும், மாபெரும் நன்றியுணர்வையும் உரிமையாளர்களால் மட்டுமே உணரமுடியும். அதனாலேயே நாய்களுக்கு பிறந்த நாள், வளைகாப்பு, இறுதி சடங்கு நடத்தும் நிகழ்வுகள் நடக்கின்றன.
அப்படி ஒரு சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் மகாதானபுரத்தில் நடந்தேறியுள்ளது. விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ’சச்சின்’ என்னும் தங்களின் செல்ல நாய்க்கு அதன் உரிமையாளர் குடும்பம் நினைவிடம் கட்ட முடிவெடுத்துள்ளது.
இவர்கள் தங்கள் வீட்டில் மொத்தம் 4 நாய்களை செல்லப்பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக "சச்சின்" என்ற நாய் இவர்களின் செல்லப்பிள்ளையாகவே மாறியிருந்தது. தினசரி காலை 5.30 மணிக்கே கதவைத் தட்டி, உரிமையாளர்களை எழுப்பிவிடும் சச்சின், வெளிக்கதவைத் திறந்து விட்டதுமே நேராக செல்வது வீட்டின் அருகில் ஓடும் வாய்க்காலுக்குத்தான். அங்கு சென்று காலையிலேயே உற்சாக குளியல் போட்டுவிட்டுதான் வீடு திரும்பும்.
சச்சின், ஹரிபாஸ்கர் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் செல்லப் பிள்ளையாக இருந்துள்ளது. குளித்துவிட்டு வரும்போது அப்பகுதியில் டீக்கடைக்காரர் நாள்தவறாமல் வைக்கும் 'பன்"னை காலைச்சிற்றுண்டியாக சாப்பிட்டுவிட்டு, சாலையைக் கடந்து வீட்டுக்கு வருவது சச்சினின் வழக்கம்.