கடந்த 2018ஆம் ஆண்டு கோயம்புத்தூரைச் சேர்ந்த, ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கில் தொடர்புடைய முகமது ஆசிக் என்ற நபர் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிணையில் வெளிவந்த முகமது ஆசிக் மயிலாடுதுறை அருகே நீடூரில் கோழிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் முகமது ஆசிக் ஆஜராகவில்லை. இதனையடுத்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் நேற்று (மே.27) நள்ளிரவு நீடூர் சென்று மயிலாடுதுறை காவல் துறை உதவியுடன் முகமது ஆசிக்கை கைது செய்து, சென்னை அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து: வரும் வாரம் முதல் 1,200 ரூபாய்க்கு விற்பனை