மயிலாடுதுறை: திருவிழந்தூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தெட்ஷிணாமூர்த்தி என்பவருக்குமிடையே கோயில் நிகழ்ச்சிக்கு பணம்கொடுப்பது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது அசோக் குமாருக்கு ஆதரவாக குருமூர்த்தி(28) மற்றும் குருமூர்த்தியின் உறவுக்கார 18 வயது சிறுவனும் சண்டையை விலக்கி விட முற்பட்டபோது இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னை தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தெட்ஷிணாமூர்த்தி தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து குருமூர்த்தி, சிறுவன் மற்றும் அசோக்குமார் ஆகிய மூன்று பேரை மயிலாடுதுறை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணைக்கு பின்னர் காவல் துறையினர் மூவரையும் சனிக்கிழமை பிற்பகல் எச்சரிக்கை செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் சிறுவனை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனம் உடைந்த சிறுவன் வயல்களுக்கு அடிக்கும் பூச்சுக்கொல்லி விஷ மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை மீட்ட உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் நேரில் விசாரணை மேற்கொண்டார். காவல்துறை தாக்கியதே இதற்குக்காரணம் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்கு அழைத்துச்சென்ற சிறுவன் காவல்துறையினர் தாக்கியதாக விஷமருந்தி தற்கொலை முயற்சி இதையும் படிங்க:பள்ளியில் மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; மூன்று பேர் கைது