மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராகவும், மாணவர்கள் விடுதி கண்காணிப்பாளராகவும் உள்ளவர் ரோகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதியில் தங்கியிருக்கும் 9ஆம் வகுப்பு படித்து மாணவனிடம் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவன் அதே விடுதியில் தங்கி 6ஆம் வகுப்பு படிக்கும் தனது தம்பியிடம் தெரிவித்துள்ளான். அந்த மாணவன் அவர்களது தாயாரிடம் தெரிவித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார், மயிலாடுதுறை அனைத்து போலீசாரிடம் புகார் அளித்தார். அதோடு பள்ளி நிர்வாகத்திடமும் முறையிட்டார்.
இதனடிப்படையில் அந்த ஆசிரியரை பணியில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியது. இதனால் விரக்தியடைந்த ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அதன்பின் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே மயிலாடுதுறை போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர் குணமடைந்து திரும்பியபோது போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துவந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க:16 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 8 பேர் கைது