நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி பேருந்து நிலையம் அருகே நாகை - வேதாரண்யம் நெடுஞ்சாலையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. குடியரசு தினத்தன்று நடைபெற்ற விழுந்தமாவடி மக்கள் கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதனை நாகை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
கரோனா பெருந்தொற்றுக் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து, டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் செய்துள்ள தளர்வுகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 6ஆம் தேதி முதல் அரசு மதுபானக் கடைகள் இயங்கிவருகின்றன.
இந்நிலையில், விழுந்தமாவடி கிராம மக்கள் மீண்டும் சபையைக் கூட்டி ஊர் பொதுமக்கள் யாரும் டாஸ்மாக் கடைக்கு செல்லக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர். இத்தீர்மானத்தின் விளைவாக விழுந்தமாவடி, புதுப்பள்ளி, மீனவர் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மது பிரியர்கள் யாரும் டாஸ்மாக் கடைக்கு இன்று செல்லவில்லை. அதுமட்டுமின்றி மது வாங்க தங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் யாரேனும் வருகிறார்களா என கண்காணிக்க, கிராம சபை சார்பில் குழு அமைத்து கண்காணித்தும் வருகின்றனர்.
பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக விழுந்தமாவடி டாஸ்மாக் கடை முன்பு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று மது பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழியும் வேளையில், மது வாங்க ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடிய டாஸ்மாக் கடையை கண்ட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:போலி டாஸ்மாக் டோக்கன் அச்சடித்து மது வாங்க வந்த 10 பேர் கைது!