மயிலாடுதுறை மாவட்டம் ஆட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (28). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். வழியில் மாந்தை மேல் அய்யனார்குடி என்ற இடத்தில் உள்ள நக்கம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செல்போன் அழைப்பு வந்ததை அடுத்து முருகானந்தம் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது கும்பகோணத்திலிருந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டீசலை ஏற்றிக்கொண்டு, காரைக்கால் நோக்கி சென்ற டேங்கர் லாரி அதிவேகமாக வந்த போது ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே திருப்பத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்து உள்ளது. இதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த முருகானந்தம் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து டீசல் வெளியேறியது.
உடனடியாக டேங்கர் லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பாலையூர் காவல்துறையினர் மற்றும் மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.