தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்' - தமிமுன் அன்சாரி - Manithaneya Jananayaga Katchi

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

அன்சாரி
அன்சாரி

By

Published : Oct 23, 2020, 6:52 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலில் எழுப்பியது நாங்கள் தான். அந்த வகையில் இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி காட்டுகிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சார்பில், மக்கள் பிரதிநிதிகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது ஆளுநரின் ஜனநாயக கடமையாகும். எளிய மக்களின் நலன் காக்கும் ஒரு சமூக நீதி விவகாரத்தில், முடிவெடுப்பதற்கு நான்கு வாரங்கள் வரை ஆகலாம் என ஆளுநர் மாளிகை தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

இது மாணவர் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இச்சட்டத்தையே நீர்த்து போகச் செய்யும் நோக்கமும் கொண்டதாக இருக்கிறது. இம்மசோதா குறித்து சமீபத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தப் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருகிறோம் என அவர் சொன்னதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து அமைச்சர்கள் விளக்கமளிக்க வேண்டும்.

கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் இந்த மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல் மக்கள் ஆதரவுடன் ஜனநாயக வழி போராட்டங்கள் வலிமை பெறுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதையும் எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டுகிறோம்". இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details