தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில், கணினி அறிவியல் பிரிவுக்கான முதுநிலை ஆசிரியர் நியமனம் செய்வதற்கான இணையதள எழுத்துத்தேர்வு இன்று நடைபெற்றது. இணையதளம் மூலம் நடைபெறும் இத்தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 1 மணி வரை நடைபெறும். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 119 மையங்கள் அமைக்கபட்டிருந்தன.
நாமக்கல், திருச்செங்கோடு சாலையில் உள்ள கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத சுமார் 1,500 பேர் காலை 8 மணி முதல் தேர்வு எழுதும் வகுப்பறைக்குச் சென்றனர். இருப்பினும் தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால் தற்போது வரை தேர்வு நடத்தப்படவில்லை.
இது குறித்து, தேர்வறைக் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தேர்வு தொடங்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதன் காரணமாக தேர்வு எழுதவந்த ஆசிரியர்கள், கர்ப்பிணிப் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மற்ற மையங்களில் ஆசிரியர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது தாங்கள் மட்டும் தேர்வு எழுதாமல் இருப்பது வேதனையான ஒன்றாகும் என தேர்வர்கள் தெரிவித்தனர்.
கணினி ஆசிரியர் தேர்வு நிறுத்திவைப்பு - தேர்வர்கள் அவதி உடனடியாக கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தின் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தேர்வர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.