நாகப்பட்டினம்: மத்திய அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் நெல்லை என்.பைசல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய வேளாண்மை திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்டத் தலைவர் பஹ்ருதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் திருநெல்வேலி என். பைசல் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் நெல்லை என்.பைசல் செய்தியாளர்களிடம் கூறுகையில்; மத்திய அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு எதிராக வேளாண் திருத்த சட்டத்தை கொண்டுவந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டங்களை நடத்துவோம் என்றார்.
இதையும் படிங்க: 2021 சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிப்பு!