மயிலாடுதுறை:தரங்கம்பாடிக்கு உட்பட்ட செம்பனார் கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் ’நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் சபத யாத்திரை’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டார்.
பின்னர் சபத யாத்திரை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் அஞ்சல் துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள், உள்ளிட்டவற்றை பார்வையிட்ட பின்னர், பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் பேசியதாவது, “தமிழ்நாடு என்பது பாரம்பரியம் பாதுகாப்பு கலாச்சாரமிக்க சோழர்கள் வாழ்ந்த நாடு. இதில் அப்துல்கலாம், திருவள்ளுவர், ராமானுஜம், எம்ஜிஆர், கமல்ஹாசன், சுந்தர் பிச்சை உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நாடுதான் தமிழ்நாடு.
இந்த ஒன்பதரை ஆண்டுகளில் ஏழைகளை பொருளாதார ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கழிப்பறை வசதி இல்லாத வீடுகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள், அடித்தட்டு மக்கள் முன்னேற வேண்டும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அனுதினமும் உழைப்பவர்தான் நமது பாரதப் பிரதமர் மோடி.
அவரின் ஒன்பதரை வருட ஆட்சியில் 80 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் உணவு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமென்ற பிரதமர் மோடியின் தலைமைப் பண்பிலான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் இன்று உலக அளவில் இந்தியா ஐந்தாவது பொருளாதார நாடாக வளர்ச்சி கண்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும், மத்திய அரசின் திட்டங்களில் பயனடையாதோர் பயனடைவதற்கும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் சபத யாத்திரை விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.
தீ விபத்து:முன்னதாக அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த வாகனத்தில் ஜெனரேட்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தீயணைப்புத் துறையால் அணைக்கப்பட்டு, மீண்டும் பிரச்சார வாகனம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயனடைந்த பல்வேறு பயனாளிகளுடன் காணொளி மூலம் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில். சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால், மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மற்றும் பல்வேறு வங்கி மேலாளர்கள், மாவட்டத் தலைவர் அகோரம் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:"நான்கு நாட்களாக எங்களது வீட்டிற்கு பால் வரவில்லை" - ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதங்கம்!