நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவின் 467ஆம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று(டிச.23) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நாகூர் தர்கா ஆதினஸ்தர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நாகூர் வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து நாகூர் வந்த ஆளுநருக்கு, பாரம்பரிய முறைப்படி தர்ஹா மணி மேடையில் ஆளுநர் அமர்ந்திருந்தபடி, மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவியை அலங்கார வாசலில் நாகூர் தர்ஹா ஆதினஸ்தர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ஆளுநர் தர்காவிற்கு உள்ளே சென்று பெரிய ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார்.
அதன்பின், தர்கா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில்,' '467வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாச்சாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று எழுதினார். ஆளுநர் வருகையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.