தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லுத்தரன் திருச்சபையின் 14-வது பேராயர் பதவியேற்பு; மத்திய - மாநில அரசுகளுக்கு பிரார்த்தனை! - Mayiladuthurai news

கடந்த ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் 14-வது பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ் பதவியேற்றுக் கொண்டார். வாரந்தோறும் மத்திய - மாநில அரசிற்காக சிறப்பு பிரார்த்தனை நடத்த உள்ளதாக கூறினார்.

14-வது பேராயர்
14-வது பேராயர்

By

Published : Jan 14, 2023, 5:13 PM IST

லுத்தரன் திருச்சபையின் 14-வது பேராயர் பதவியேற்பு

மயிலாடுதுறை: ஆசியாவின் முதல் புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களின் திருச்சபையான தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதன் 14-வது பேராயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்றது.

காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் தலைமையில், மதுரை மாவட்ட முன்னாள் நீதிபதி ரத்னராஜ், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜெயச்சந்திரன் ஆகியோர் கொண்ட மூன்று பேர் குழுவினர் தேர்தலை நடத்தினர்.

தேர்தலைத் தொடர்ந்து 14-வது பேராயராக கிறிஸ்டியன் சாம்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்பு விழா தரங்கம்பாடியில் உள்ள 306 ஆண்டுகள் பழமை வாய்ந்த எருசேலம் ஆலயத்தில் இன்று(ஜன.14) நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து 13-வது பேராயர் டேனியல் ஜெயராஜ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜூக்கு பதவியேற்பு செய்து பொறுப்புகளை ஒப்படைத்தார். செங்கோல் மற்றும் சிலுவை மோதிரம், பேராயருக்கான அங்கி மற்றும் திருமுடி ஆகியவை பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜூக்கு அணிவிக்கப்பட்டது.

பேராயர் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜெர்மனி, லண்டன், உள்ளிட்டப் பல்வேறு நாடுகளில் இருந்து திருச்சபை சபையார்கள், ஆயர்கள், பேராயர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேராயர் பதவியேற்றதை முன்னிட்டு வெளிநாடு மற்றும் உள்நாட்டு குழுவினர் சேர்ந்து சிறப்பு பாடல் பாடி ஆராதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த 14-வது பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், வாரந்தோறும் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில் மத்திய - மாநில அரசுகளுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறினார். கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அனைவரும் இந்தியன் என்ற உணர்வுடன் நாட்டில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், சீகன் பால்குவால், தமிழ் முதல் அச்சு இயந்திரத்தை அமைத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட பைபிள் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது என்றும்; அதனை மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:Palani kumbabishekam: பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளணுமா? இதைப்படிங்க

ABOUT THE AUTHOR

...view details