வாழ்க்கையில் இயந்திரம் போல உழன்று கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் பொக்கிஷமான நாட்கள் சில உண்டு. அவற்றில் முக்கியமானது, நம் பள்ளிப்பருவ நினைவுகள். முட்டாள்கள் தினமாக சொல்லப்படும் ஏப்ரல் 1 ஆம் தேதி நண்பர்கள் சட்டையில் கருப்பு மை தெளித்து விளையாடுவது, இடைவேளையில் மதிய உணவைத் திருடி திண்பது, பள்ளி முன்பு திண்பண்டங்களை விற்கும் பாட்டியிடம் மிட்டாய் வாங்கித் திண்பது என பொக்கிஷங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
நாக்கை சொட்டு போட்டு சாப்பிட வைக்கும் கமர்கட்டு, இலந்தை அடை, பொரி உருண்டைகள் விஷேச வீட்டில் மட்டும் சந்திக்கும் உறவினர்களைப் போல இக்கால குழந்தைகளுக்கு கொஞ்சம் அந்நியமாகி தான் போய்விட்டது.
இப்படி யோசிப்பவர்களுக்கு கவலை வேண்டாம், நான் இருக்கிறேன் என்று ஆதரவு கரம் நீட்டுகிறார் இராசி ஸ்நாக்ஸ் கடையின் உரிமையாளரும், தமிழார்வலருமான கவிஞர் இரா.சிவக்குமார்.
கடைகள் முன்பு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பொரி உருண்டை உள்ளிட்ட திண்பண்டங்கள்! தமிழார்வலருக்கும், திண்பண்டங்களுக்கும் என்னத் தொடர்பு என, உங்கள் மனதில் ஓடும் எண்ணவோட்டம் புரிகிறது. வாருங்கள் பார்ப்போம். திருவள்ளுவரின் படமும், எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் என்ற திருக்குறள் மட்டுமில்லை, கடையில் விற்பனைப் பட்டியலில் இருக்கும் கமர்கட்டு, இலந்தை அடைகளும், முடக்கத்தான், முருங்கைக்கீரை என ஐவகை கீரை பிஸ்கட் என மூலிகைத் திண்பண்டங்களும், சாத்தூர் மிளகுசேவு, மணப்பாறை முருக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய் என, வெளியூர் திண்பண்டங்களும், கடைக்குள் நுழையும் நம் கண் அடைத்து, நம்மை வரவேற்கின்றன.
வாடிக்கையாளராக வருகை தந்த சிறுமியிடம் உரையாடும் கடை உரிமையாளர். திண்பண்டங்களின் பட்டியல் நாக்கில் எச்சில் ஊறும் உணவுப் பிரியர்கள், இதற்காக கொஞ்சம் மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடி வரை செல்ல வேண்டும். அங்குதான் இருக்கிறது இராசி ஸ்நாக்ஸ் கடை.
தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனைப் பிரதிநிதியான, தமிழ் ஆர்வலர் கவிஞர் இரா.சிவக்குமாரை மிட்டாய் கடை முதலாளியாக்கியிருக்கிறது கரோனா தொற்று. கரோனா தொற்றால் வேலையிழந்தவர்களில் சிவக்குமாரும் ஒருவர்.
வேலையின்றி மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தவரின் கையிருப்பை காலம் மெல்லக் கரையத்தொடங்கியது. இனியும் முடங்கி கிடக்கக்கூடாது என அடுத்த கட்ட நகர்விற்கு அடியெடுத்து வைத்தவருக்கு உதவியது விற்பனை பிரதிநிதியின் அனுபவம். அந்தத் தன்னம்பிக்கை விதையை உரமாக்கி வளரத் தொடங்கியிருக்கிறார் சிவக்குமார்.
இராசி ஸ்நாக்ஸ் பாரம்பரிய பலகாரக்கடை பணி இழப்பால் கையிருப்பு கரையத் தொடங்கியதும், பலகாரத் தொழிலில் ஈடுபட திட்டமிட்டேன். பத்தோடு பதினொன்றாக இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. மனதில் தோன்றிய பாரம்பரியப் பலகாரக் கடையைத் தொடங்கினேன்.
என் தந்தை மற்றும் எனது பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு, 'இராசி ஸ்நாக்ஸ்' பலகாரக்கடையை நடத்தி வருகிறேன். கடையில் பாரம்பரியம், திண்பண்டங்களுடன் வெவ்வேறு ஊர்களில் தனித்துவமான திண்பண்டங்களை வரவழைத்து விற்பனை செய்கிறேன் என, தன் கனவிற்கு வடிவம் கொடுத்த கதையைச் சொல்கிறார் சிவக்குமார்.
உடலுக்கு ஊட்டச்சத்தை ஊட்டும் திணை, குதிரைவாலி, கம்பு, சாமை, ராகி போன்ற சிறுதானியங்களில் செய்யப்பட்ட பிஸ்கெட்டுகளும், முடக்கத்தான், முருங்கைக்கீரை என ஐவகை கீரைகள், ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ, வெண்தாமரை, வாழைத்தண்டு, நெல்லிக்காய் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பிரத்யேகப் பிஸ்கட்களை விற்பனை செய்யும் சிவக்குமார், திருநெல்வேலி அல்வா, விருதுநகர் கருப்பட்டி, கோவில்பட்டி கடலை மிட்டாய், காரைக்குடி ஜூஸ்பெரி, தூத்துக்குடி மக்ரூன், சாத்தூர் மிளகுசேவு, மணப்பாறை முறுக்கு, சிவகாசி கருப்பட்டி மிட்டாய் என, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் பிரத்யேகத் திண்பண்டங்களை வரவழைத்து மயிலாடுதுறையில் சங்கமிக்கச் செய்திருக்கிறார்.
வாடிக்கையாளர்களின் திருப்திதான் வியாபாரத்தின் வெற்றி என்பதை உணர்ந்திருக்கும் சிவக்குமார், கடையில் விற்பனை செய்யும் பண்டங்களை ஒரு வாரத்திற்கு மேல் வைத்திருப்பதில்லை.
இதனால், திண்பண்டங்களின் சுவையும் தரமும் குறைவதே இல்லை. இதற்கு சாட்சி சொல்கிறார் வேதாரண்யத்திலிருந்து மயிலாடுதுறைக்கு வந்து திண்பண்டங்கள் வாங்கிச் செல்லும் தமிழரசன், மைதா, சீனி இல்லாமல், நாட்டு சர்க்கரையில் தயாரிக்கப்படும் இத்திண்பண்டங்களை என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுறாங்க. அதுக்காகவே, சுமார் 102 கி.மீட்டர் தாண்டி வந்து பண்டங்கள் வாங்கிட்டுப் போறேன் என்கிறார்.
இந்த கடை என் பள்ளிப்பருவ நினைவலைகளைத் தூண்டியதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
'90'ஸ் கிட்ஸ் விரும்பி தின்ற தேன் மிட்டாய், ஜீரக மிட்டாய், சோன் பப்டி, ஓம ரொட்டி ஆகியவைகளை விற்பனைக்கு வைத்திருக்கும் சிவக்குமார், பாரம்பரிய திண்பண்டங்களை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தனது விருப்பம் என்கிறார். அவரின் விருப்பம் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.