காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்க வலியுறுத்தி போராடிய முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனசங்க தோற்றுவிப்பாளருமானவர், சியாம பிரசாத் முகர்ஜி. இவர் சட்டப்பிரிவு 370-ஐ நீக்க கோரியதற்காக காஷ்மீரிலேயே சிறை வைக்கப்பட்டு, 1953-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி சிறையிலேயே உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் இவருடைய நினைவு தினத்தை பாரதிய ஜனதா கட்சியினர் அனுசரித்துவருகின்றனர். இவரது வாழ்நாள் கோரிக்கையான காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டதையொட்டி, இந்த ஆண்டு சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை குருபூஜை விழாவாக மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று அலங்கரித்து வைக்கப்பட்ட சியாம பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு வழிபாடு நடத்தினர். மோட்ச தீபங்களை காவிரி ஆற்றில் விட்டனர். இந்த நிகழ்வு அக்கட்சியினரால் படம் பிடிக்கப்பட்டது. அதில், விழா நடைபெற்றபோது கருப்பு நிறத்தில் அமானுஷ்ய உருவம் ஒன்று கடந்து செல்வது பதிவாகியுள்ளது. இதனை பாஜக மயிலாடுதுறை நகர தலைவர் மோடி.கண்ணன் என்பவர் சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்டதை அடுத்து அப்பதிவு வைரலாகி வருகிறது.