மயிலாடுதுறை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் அன்று, தாங்கள் விளைவித்த நெல்மணியில் இருந்து கிடைத்த அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு, கரும்பு வைத்து படையல் இட்டு விவசாயம் செழிக்க காரணமான சூரியபகவானை வழிபடுவது தமிழர் பண்பாடு. இதில் நெல்லுக்கு அடுத்தபடியாக அனைவரது மனதிலும் இனிக்கும் கரும்பு முக்கிய இடம் வகிக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் போது, அதில் பொங்கல் வைக்க பயன்படுத்தும் செங்கரும்பை சேர்த்து வழங்குவது கடந்த சில வருடங்களாக வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பை அறிவித்ததற்கு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள கரும்பு விவசாயிகள், நேரடியாக கூட்டுறவு துறை மூலமாக கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னம்பந்தல், தருமபுரம், அச்சுதராயபுரம், வானாதிராஜபுரம், கடலங்குடி, காத்திருப்பு, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம், ராதாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், பொங்கல் கரும்பு சுமார் 200 ஏக்கரில் ஐந்து லட்சம் கரும்புகள் பயிரிடப்பட்டு உள்ளது. இடையில் மழை, பலத்த காற்று காரணமாக கரும்பு சாய்ந்த போது, அதனை விவசாயிகள் கட்டிக் காப்பாற்றி, தற்போது கரும்புகள் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.
ஆட்கள் சம்பளம், உரங்களின் விலை உயர்வு என ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். பொங்கலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.