மயிலாடுதுறை:தலைஞாயிறு பகுதியில் அமைந்துள்ள என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த ஐந்து அரவை பருவங்களாக இயக்கப்படாமல் உள்ளது. நிகழாண்டிலும் அரவையைத் தொடங்க எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் ஆலைத் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
2017ஆம் ஆண்டு ஆலை ஊழியர்களை பிற கூட்டுறவு ஆலைகளுக்குப் பணி மாற்றம் செய்து ஆலை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து 50 விழுக்காடு ஊழியர்கள் மட்டுமே பிற ஆலைகளுக்குச் சென்றனர். மீதமுள்ள 50 விழுக்காடு பணியாளர்கள் இந்த ஆலையிலேயே பணி செய்துவருகின்றனர்.
இந்த ஆலையிலேயே பணிபுரியும் ஊழியர்களுக்கு 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் ஆலையில் பணி செய்து ஓய்வுபெற்றவர்களுக்கு எந்தவித பண பயனும், ஓய்வு ஊதியமும் வழங்கப்படவில்லை.