நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த நாகக்குடையான் கிராமத்தில் குளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில், தன் உயிரைத் தியாகம் செய்து 11 குழந்தைகளைக் காப்பாற்றிய ஆசிரியை சுகந்தியின் 11ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று(டிச.3) மாணவ, மாணவியர் உள்பட பொதுமக்கள் ஆசிரியை சுகந்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
வேதாரண்யத்தில் உள்ள நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சுகந்தி (21), தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். மாணவர்களுக்கு கல்வியைக் கற்பிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஆசிரியை சுகந்தி கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி அப்படியொரு சம்பவம் நடக்கும் என எதிர்பார்த்திருக்கமாட்டார்.
அன்று வழக்கம் போல ஒரு வேனில் மாணவ, மாணவிகளுடன் சுகந்தி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். செல்போனில் பேசியபடி, ஓட்டுநர் வேனை இயக்கியதால் பனையடி கொத்தகை அருகே ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகிலிருந்த குளத்தில் கவிழ்ந்தது.
ஆசிரியை சுகந்தியின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று! தண்ணீரில் மூழ்கிய 11 பள்ளி குழந்தைகளை மீட்டு கரை ஏற்றிய சுகந்தி, மற்றொரு குழந்தையை மீட்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். எதிர்பாராதவிதமாக அவருடன் 9 பள்ளி மாணவ, மாணவிகளும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நேர்ந்து 11ஆவது ஆண்டாகிய நிலையில், நாகக்குடையான் மேலக்காடு கிராம ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியை சுகந்திக்கும், அவரோடு உயிரிழந்த 9 மாணவர்களுக்கும் இன்று (டிச.3)அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியில் கட்டப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.