'வாரிசு' படம் பார்த்த நரிக்குறவர் மக்கள் - ஏற்பாடு செய்த விஜய் ரசிகர்கள் மயிலாடுதுறை:கடந்த 11ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆகிய விஜய்யின் 'வாரிசு' (Varisu) மற்றும் அஜித்தின் 'துணிவு' (Thunivu) ஆகிய படங்கள் வெற்றிநடைப் போட்டு வருகின்றன. அலப்பறையான ரசிகர்களின் கொண்டாட்டத்தின் நடுவே வெளியாகிய இந்த இரண்டு படங்களையும் தைப்பொங்கலையொட்டி, ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்யின் 'வாரிசு' படத்திற்கான டிக்கெட்களை இலவசமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் அளித்த சுவாரஸ்யமான சம்பவம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது. பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நரிக்குறவ மக்களுக்கு 'வாரிசு' பட டிக்கெட்கள் இலவசமாக இன்று (ஜன.15) வழங்கப்பட்டன. நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் வசித்து வரும் நரிக்குறவர் குடும்பத்தினர் தியேட்டருக்கு வந்து வாரிசு படத்தை பார்ப்பதற்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில், 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வாரிசு படத்தின் டிக்கெட்டை இலவசமாக வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பொங்கல் பரிசாக அக்குடும்பத்தினருக்கு அளித்தனர். டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் ஆர்வத்துடன் தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தனர். தொடர்ந்து, வாரிசு படத்திற்கு இலவசமாக டிக்கெட் அளித்த விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அம்மக்கள் தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - பைரவர் கோயிலில் பூசணி மீது ஒரிஜினல் மஞ்சள் பூசி விற்பனை