மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு
பூங்காக்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் சுற்றித் திரிகின்றனர். மேலும், டிஜிட்டல் பேனர்கள் மற்றும் சுவர்களில் ஒட்டுவதற்கு பயன்படும் பசையைப் பயன்படுத்தி புதுவிதமான போதையை உருவாக்கி கொள்கின்றனர். அதுமட்டுமன்றி போதைப் பொருள்கள் மூலம் போதைக்கு அடிமையாவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பலர் வகுப்புகளை புறக்கணித்து விட்டு நகராட்சிப் பூங்காவில் சுற்றித்திரிகின்றனர் என புகார் வந்த நிலையில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இருசக்கர வாகனத்தில் சென்று மாணவர்களை விரட்டி பிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பாதி மாணவர்கள் ஆசிரியரைக் கண்டவுடன் பூங்கா சுவர் ஏறி குதித்து தப்பித்துச் சென்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, “அரசுப் பள்ளிகளில் வெளியூரில் இருந்து மாணவர்கள் பயில்கின்றனர். மாணவர்கள் படிப்பு குறித்து பெற்றோர்கள் எந்த அக்கறையும் காட்டாத நிலையில், ஆசிரியர்கள் குறைந்தபட்சம் தண்டனை மாணவர்களுக்கு வழங்கும் விதத்தில் விதிகளை திருத்த வேண்டும். தட்டிக் கேட்கும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் சம்பவமும் நடந்து வருகிறது. மாணவர்கள் பசையைப் பயன்படுத்தி புதுவிதமான போதையை ஏற்றிக் கொள்கின்றனர்” என வேதனை தெரிவித்தனர்.