திருவிளையாட்டத்தில் அரசு பேருந்தை வழிமறித்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் மயிலாடுதுறை: நாகப்பட்டினத்தில் இருந்து காரைக்கால், திருவிளையாட்டம் வழியாக மயிலாடுதுறை செல்லும் 443 என்ற அரசு பேருந்து, காலை 8.45 மணியளவில் திருவிளையாட்டம் பகுதியில் நின்று செல்வது வழக்கம். இந்த பேருந்தில்தான் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.
ஆனால் இந்த பேருந்து சமீப காலமாக திருவிளையாட்டம் பகுதியில் நிற்காமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்து கொண்டே குறிப்பிட்ட பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொறையார் போக்குவரத்து பணிமனை கழக மேலாளர் ஜெயக்குமார் மற்றும் பெரம்பூர் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியாக இனிமேல் திருவிளையாட்டம் பகுதியில் பேருந்து நின்று செல்லும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சாலை மறியல் போராட்டத்தால் செம்பனார்கோவில், அரும்பாக்கம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் தீண்டாமை கொடுமை? திடீர் சாலை மறியலால் பரபரப்பு!