மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயர் பிரசித்திப் பெற்றவர் என்பதால் இக்கோயில் அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இக்கோயில் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் ஆகிய 4 பழமையான சிலைகள் கடந்த 23.11.1978இல் திருடுபோயின. இவ்வழக்கு 25.01.1988 இல் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டு தமிழ்நாடு சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர். அதன்பின் லண்டன் காவல் துறையினர் சிலைகளை மீட்டு இந்திய தூதரக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்தியா கொண்டுவரப்பட்ட சிலைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
லண்டனில் மீட்கப்பட்ட ராமர் சிலைகள் அதனைத் தொடர்ந்து சிலைகளை தமிழ்நாடு முதலமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகரன், இணை ஆணையர்கள் சிவக்குமார், செல்வராஜ், உதவி ஆணையர் இளையராஜா கோயில் செயல் அலுவலர் சங்கேஸ்வரி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து நேற்றிரவு (நவம்பர் 20) கும்பகோணம் சிலைகள் காப்பகத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்ட சிலைகள் இன்று (நவம்பர் 21) காலை அங்கிருந்து அனந்தமங்கலம் கொண்டுவரப்பட்டது. அங்கு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிலைகளுக்கு வரவேற்பளித்து சிலைகளை மேளதாளம் முழங்க கோயிலுக்கு கொண்டுவந்து பக்தர்கள் தரிசனத்திற்காக தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சிலைகள் பாதுகாப்பாக கோயிலுக்குள் வைத்து பூட்டப்பட்டன. திருடப்பட்ட சிலைகளை மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு அனந்தமங்கலம் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். திருடப்பட்டதில் எஞ்சிய நான்காவது சிலையான ஆஞ்சநேயரையும் மீட்டு கோயிலுக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர்.