தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேக்ளா ரேஸுக்கு தடை விதித்து உத்தரவு - திருக்கடையூர்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, நாகை மாவட்டம் திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Stay for rekhla race
Stay for rekhla race

By

Published : Jan 13, 2020, 11:06 PM IST

பொங்கல் பண்டிகையையொட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் தேசிய நெடுஞ்சாலையில் குதிரை மற்றும் மாடுகளை வைத்து வரும் 17ஆம் தேதி ரேக்ளா ரேஸ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரேஸில் பங்கேற்கும் வீரர்களுக்கு காப்பீடு, விலங்குகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளாமல், சில அரசியல் பிரமுகர்கள் சுயலாபத்திற்காக இந்த போட்டிகளை நடத்துகின்றனர் எனக் கூறி, நாகப்பட்டினத்தை சேர்ந்த சங்கமித்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ரேக்ளா ரேஸில் பங்கேற்கும் குதிரைகள், மாடுகள் துன்புறுத்தப்படுவது, இரு பிரிவினைரிடையே மோதல்கள் காரணமாக மயிலாடுதுறை பகுதிகளில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை விதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கும் என்பதையும் குறிப்பிட்டு ரேக்ளா ரேஸ் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், மீறி ரேஸ் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதி பெறாமல் கடந்த முறை தரங்கம்பாடியில் ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலையில் ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது என்பதை கருத்தில் கொண்டு, நாகை மாவட்டம் திருக்கடையூர் தேசிய நெடுஞ்சாலையில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details