மயிலாடுதுறை: சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சீர்காழி தனி தொகுதி திமுக வேட்பாளர் வக்கீல் மு.பன்னீர்செல்வம், பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்குமார் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
பாஜகவிற்கு ஆட்சி ஒரு கேடா
அப்போது பேசிய அவர், "பாஜக, அதிமுக கூட்டணி வளர்ச்சி கூட்டணி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அது வளர்ச்சி கூட்டணி அல்ல. லஞ்சம், ஊழல் கூட்டணி. எய்ம்ஸ் என்ற ஒரு திட்டத்தை கூட நிறைவேற்ற முடியவில்லை. உங்களுக்கு எல்லாம் ஆட்சி ஒரு கேடா.நாடாளுமன்ற தேர்தலை போல இந்த முறையும் பாஜகவிற்கு ஜீரோதான். பாஜகவை ஆதரிக்கும் அதிமுகவிற்கும் ஜீரோதான்.
மோடி பிரதமராக இருப்பதற்கே லாயக்கு இல்லாதவர்
பிரதமர் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தரம் தாழ்ந்து பேசுகிறார். கடந்த 10ஆண்டுகளாக நடைபெறுவது அதிமுக ஆட்சிதான். ஆனால் திமுக, காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசிவிட்டு செல்கிறார். பொள்ளாச்சி சம்பவம் பிரதமருக்கு தெரியாதா. இந்த சம்பவம் தெரியவில்லை என்றால் மோடி பிரதமராக இருப்பதற்கே லாயக்கு இல்லாதவர். திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களை விடமாட்டோம்.
சீர்காழி தேர்தல் பரப்புரையில் மோடியை விமர்சித்த ஸ்டாலின்
ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு இல்லை
மதுரையில் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை சிறப்பான வகையில் உருவாக்கபோகிறோம் என மீண்டும் பொய் பேசி விட்டு சென்றிருக்கிறார். ஜெயலலிதா அரசியல் எதிரி என்றாலும் அவர் இருந்த வரை நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. உழவர் சந்தை, விவசாய கடன் தள்ளுபடி என திமுக அறிவித்ததும் அதனை அப்படியே நகல் எடுத்ததுபோல் பழனிசாமி அறிவிக்கிறார். கரோனா நிவாரணமாக 5000 ரூபாய் வழங்க கூறினோம். ஆனால் அதிமுக 1000 ரூபாய் வழங்கினார்கள். மீதி 4000 ரூபாய் திமுக ஆட்சிஅமைந்ததும், கருணாநிதி பிறந்தநாளன்று வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.