தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் மயிலாடுதுறை: தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவித்திருந்தது.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதலே மிதமானது முதல் கனமழை கொட்டி தீர்த்தது தற்போது நேற்று காலை முதல் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, பொறையார், மேலையூர், வானகிரி, உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் கடற்கரை ஓர கிராமங்களிலும் மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வந்தது.
மேலும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலான நிலவரப்படி, மயிலாடுதுறையில் 38.50 மி.மீ, மணல்மேடு 17 மி.மீ, சீர்காழி 44.40 மி.மீ, கொள்ளிடம் 31.80 மி.மீ, தரங்கம்பாடி 43.20 மி.மீ, செம்பனார்கோவில் 56.60 மி.மீட்டரும் மாவட்டத்தில் சராசரியாக 38.58 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. நள்ளிரவில் இருந்தே தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிப்பட்டுள்ளது.
சாலைகளில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறை, வட்ட வழங்கல் துறை, மகளிர் உரிமை திட்ட அலுவலகம், மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. பின்புறம் உள்ள தீயணைப்பு துறை வளாகத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
அங்கு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 3 அடி ஆழத்தில் வாகனத்தின் அடிபுறம் சரி செய்வதற்காக உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. பேரிடர் காலத்திற்கு பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தீயணைப்பு துறை வளாகம் அருகே மழை நீர் வடியும் வடிகால் தூர்ந்து போய் சரி செய்யப்படாமல் உள்ளது.
இதனால் மழைக் காலங்களில் அவசர உதவிக்காக செல்லும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் மீட்பு பொருட்களை ஏற்றும் போது வாகனத்தை நிறுத்தி வைத்துள்ள அடியில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து காயம் ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தூர்ந்துபோயுள்ள வடிகாலை சீரமைத்தால் மட்டுமே தீயணைப்பு துறை வளாகத்தில் தண்ணீரை வடியவைக்க முடியும் என்றும் அங்குள்ள தீயணைப்பு துறை வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆளுநர் மறுப்பால் கௌரவ டாக்டர் பட்டம் பெற முடியாமல் மறைந்தார் தியாகி என்.சங்கரய்யா!